கார் குண்டு வெடிப்பு- கோவையில் என்ஐஏ விசாரணை…

published 3 days ago

கார் குண்டு வெடிப்பு- கோவையில்  என்ஐஏ விசாரணை…

கோவை: கோவையில் கார் வெடிப்பு வழக்கில் கைதான 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின்(28) என்பவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தபோது காரில் சில தடயங்கள் சிக்கின. விசாரணையில், கோவையில் மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் குண்டு வைக்க சிலர் திட்டம் தீட்டியது தெரியவந்தது. 

தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கை உக்கடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஜமேஷா முபின் கூட்டாளிகள் என மொத்தம் 15 பேரை கைது செய்தனர்.
 

இதற்கிடையே கடந்த மாதம் இந்த வழக்கில் கோவை போத்தனூரை சேர்ந்த அபு ஹனீபா, செல்வபுரத்தை சேர்ந்த சரண் மாரியப்பன், உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்த பவாஸ் ரஹ்மான் ஆகிய 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ளவர்களை காவலில் எடுத்து அடிக்கடி கோவை அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடைசியாக கைது செய்யப்பட்ட அபு ஹனீபா, சரண் மாரியப்பன், பவாஸ் ரஹ்மான் ஆகிய 3 பேரை புழல் சிறையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து இன்று கோவை அழைத்து வந்தனர். அவர்களிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. அபு ஹனீபா கோவை அரபு கல்லூரி ஆசிரியர். இவர் கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், அவரது கூட்டாளிகளுக்கு வகுப்பு நடத்தி உள்ளார். 

மேலும் சரண் மாரியப்பன், பவாஸ் ரஹ்மான் ஆகியோருக்கு குண்டு வைப்பது தொடர்பாக சதி திட்டம் தீட்டியபோது பணம் கைமாறி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் 3 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe