குமரகுரு கல்லூரியில் ட்ரோன் தொழில்துறையில் கருத்தரங்கம்!

published 1 week ago

குமரகுரு கல்லூரியில் ட்ரோன் தொழில்துறையில் கருத்தரங்கம்!

இந்திய ட்ரோன் துறையில் உள்ள புதுமைகள், சவால்கள் மற்றும் இந்தத் துறைக்கு உள்ள வாய்ப்புகள் பற்றி தொழில்துறைக்கும் மாணவர்களுக்கும் விளக்க குமரகுரு பொறியியல் கல்லூரியின் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை சார்பில் 'ட்ரோன் தொழில்துறை' குறித்த முதலாவது கருத்தரங்கம் நடைபெற்றது.

குமரகுரு தொழில்துறை ஆராய்ச்சி மையம், ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா, ஃபோர்ஜ் நிறுவனம், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் கிளஸ்டர் மற்றும் குமரகுரு பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை ஆகியவை இணைந்து இந்நிகழ்வை நடத்தின.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். 
ஏவிரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் லாங்போர்ட் இந்த கருத்தரங்கின் துவக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். இதில் ட்ரோன் தொழில்துறை சார்ந்த 15 நிறுவனங்கள் பங்கேற்றன. 10 வல்லுனர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

சங்கர் வானவராயர் பேசுகையில், பத்தாண்டுகளுக்கு முன்பு ட்ரோன் என்பது திருமணம் போன்ற சிறப்பான தருணங்களை காட்சிப்படுத்த பயன்படுத்தப்பட்ட கருவியாக இருந்தது. இன்று அந்த நிலை மாறி பல்வேறு துறைக்கு முக்கியமான ஒரு தொழில்நுட்பமாக ட்ரோன்கள் மாறி உள்ளது என்று கூறினார்.

25 ஆண்டுகளுக்கு முன் கைபேசி என்பது முதலில் பிறரிடம் உரையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட கருவியாக இருந்து வந்த நிலையில், அதற்குப் பின்னர் அது வெவ்வேறு பரிணாம வளர்ச்சி அடைந்து மாற்றங்கள் பெற்றது. அதேபோல வரக்கூடிய அடுத்த 10 ஆண்டுகளில் ட்ரோன் என்பதில் வெவ்வேறு தொழில்நுட்ப வசதிகள் சேர்ந்து அதனுடைய பயன்பாட்டில் புது மாற்றங்கள் நிகழும் என்று அவர் கருத்து தெரிவித்தார். ட்ரோன்கள் என்பது எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாக அமைவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பீட்டர் லாங்போர்ட் உரையாற்றுகையில், இன்று ட்ரோன் என்பது படப்பிடிப்புக்கு பயன்படும் கருவியாக மட்டும் நின்று விடாமல் பாதுகாப்புத் துறையில் முக்கிய இடம் பெற்றுள்ளது. உக்ரைன் - ரஷ்யா யுத்த களங்களில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை அவர் மேற்கோள் காட்டினார். ட்ரோன்கள் என்பவை வருங்காலங்களில் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய 'லாஜிஸ்டிக்ஸ்' என்கின்ற துறையிலும் விவசாயம் தொடர்பான பணிகளிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக அமையும் என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் இன்று இந்தியாவில் உள்ள ட்ரோன்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி விளக்கினார்.

ட்ரோன்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் இந்தியாவின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பொருட்களை தயாரிப்பது அவசியம் என்று அவர் கூறினார். உதாரணத்திற்கு இங்கு இருக்கக்கூடிய வானிலை சூழல், ட்ரோன்களில் உள்ள மோட்டார்களை வேகமாக சூடாக்க வாய்ப்புள்ளது. இங்கு இருக்கக்கூடிய காற்றில் உள்ள ஈரப்பத அளவு, காற்று மாசு ஆகியவை ட்ரோன்கள் திறம்பட செயல்படுவதை பாதிக்கக்கூடும். எனவே அவை அடிக்கடி பராமரிப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்படும். இதனால்  இந்தியாவுக்கு தனித்துவமாக இருக்கக்கூடிய சவால்களை அறிந்து கொண்டு அதை வடிவமைத்து உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய ட்ரோன்களின் பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரித்து ட்ரான்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வம் இந்தியாவில் நிலவும் சூழலில், ட்ரோன் உற்பத்தியாளர்கள், இந்தக் கருவிகளின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகளை உள்ளூரிலேயே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் இதற்கான பொறியாளர்கள், உற்பத்தி திறன் கொண்ட நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கின்றனர் என்று அவர் கூறினார்.

மேலும் ட்ரோன்களுக்கு உலக அளவில் சந்தை உள்ளது என கூறிய அவர், சீனா நாட்டிலுள்ள டி.ஜி.ஐ. எனும் ஒரு நிறுவனம் இன்று இந்தத் துறையில் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளதற்கு காரணம் அது சீனாவுக்குள் மட்டும் விற்பனை செய்யாமல் உலக அளவில் அதனுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்தது தான் என்று குறிப்பிட்டார்.

அவர் இந்திய நிறுவனங்களும் தாங்கள் ட்ரோன்களை உலக சந்தைகளில் இருக்கும் தேவைகள் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப உருவாக்கி ஏற்றுமதி செய்ய என்ன வேண்டும் என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe