கோவை மாநகராட்சியில் சாலைகளை சீரமைக்க ரூ.93 கோடி நிதி ஒதுக்கீடு

published 2 years ago

கோவை மாநகராட்சியில் சாலைகளை சீரமைக்க ரூ.93 கோடி நிதி ஒதுக்கீடு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகளில் 5 லட்சம் வீடுகள் உள்ளன. 6 ஆயிரம் வீதிகள் உள்ளன. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது பாதாளச் சாக்கடை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதுதவிர 24 மணி நேரக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. மேற்கண்ட பணிகள் காரணமாகச் சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சாலை குழிகளில் இருசக்கர வாகனங்கள் ஏறி, இறங்கும்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

இந்த சாலைகளைச் சீரமைப்பதற்காகக் கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. பின்னர் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி சாலை சீரமைப்பு பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் சாலைகளைச் சீரமைக்க ரூ.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"பாதாளச் சாக்கடை பணிகள், 24 மணி நேரக் குடிநீர் திட்டப் பணிகளுக்குக் குழாய்கள் பதிக்கப் பள்ளம் தோண்டப்பட்டதால் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிக்கிறது. தற்போது இந்த சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 355 இடங்களில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முத்தண்ணன் குளம், ரேஸ்கோர்ஸ், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள சாலைகளும் விரைவாகச் சீரமைக்கப்படும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகச் சாலை சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." 
இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe