ஓலா, ஊபர் செயலியில் பயணம் புக் ஆன பிறகு ஓட்டுநர்கள் ரத்து செய்கிறார்களா?அதற்கான புதிய நடைமுறை!

published 1 year ago

ஓலா, ஊபர் செயலியில் பயணம் புக் ஆன பிறகு ஓட்டுநர்கள் ரத்து செய்கிறார்களா?அதற்கான  புதிய நடைமுறை!

சென்னை : ஆட்டோ மற்றும் டாக்சி சேவையை பயணிகள் முன்பதிவு செய்த பிறகு ரத்து செய்யும் ஒட்டுனர்கள் மீது புகார் பெற்று அபராதம் விதிக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மயில்வாகனன், டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளை ஏற்க மறுத்தாலோ அல்லது புக்கிங்கை கேன்சல் செய்தாலோ அருகில் உள்ள போக்குவரத்து போலீசிடமோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ புகார் தெரிவிக்கலாம் என்றார்.

“இதுதொடர்பாக வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வளவு புகார்கள் வந்துள்ளன, எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பன போன்ற தரவுகள் இல்லை,” என்றார் மயில்வாகனன்.

''தாமாக முன் வந்து அபராதம் விதிக்க முடியாது''

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், கடந்த மாதம் மட்டும் பயணிகளின் சவாரிகளை ஏற்க மறுத்த ஐந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

“இது மற்ற சாலை போக்குவரத்து குற்றங்களைப் போல இல்லை என்பதால், பயணிகள் காவல் நிலையத்திலோ அல்லது போக்குவரத்து காவல்துறையினரிடமோ எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

போக்குவரத்து போலீசார் தாமாக முன்வந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக அபராதம் விதிக்க முடியாது,” என்றார் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகர்.

மேலும் பேசிய அவர், “ஆட்டோ ஓட்டுநர்களைப் பொருத்தவரையில் வாகன திருத்த சட்டத்திற்கு முன்பும்கூட பயணிகளை ஏற்க மறுத்தால் அபராதம் விதிக்கலாம். ஏனென்றால், அவர்கள் பயணிகள் ஆட்டோவுக்கான உரிமம் பெறும்போதே, பயணிகளை ஏற்போம் என்று ஒப்புக்கொண்டே உரிமம் பெறுகின்றனர்,” என்றார்.

எப்படி புகாரளிப்பது?

மோட்டார் வாகன திருத்த சட்டம் – 2019இன் படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சாலை போக்குவரத்து விதிமீறலுக்கான புதுப்பிக்கப்பட்ட அபராதத் தொகையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

அதன்படி, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்க மறுக்கும் ஓட்டுநருக்கு மோட்டார் வாகன திருத்தச் சட்டம் பிரிவு 178(3)(a)-இன் படி ரூ.50 அபராதமும், நான்கு சக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்ற மறுக்கும் ஓட்டுநருக்கு மோட்டர் வாகன திருத்தச்சட்டம் பிரிவு 178(3)(b)-இன் படி ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறையினரிடம் புகாரளிக்க கட்டணமில்லா சேவை எண் 1800 425 5430 தொடர்புகொள்ளலாம் அல்லது www.tnsta.gov.in என்ற போக்குவரத்து துறையின் இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.

அதேபோல சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரிடம் புகாரளிக்க, காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 9003130103 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம்.

மக்கள் நிம்மதி

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் இந்த நடவடிக்கையால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

“சென்னை பல்லாவரத்தில் இருந்து தினமும் நகர் பகுதிகளில் பயணிக்க பெரும்பாடாக உள்ளது. ஒரு முறை பயணிக்க குறைந்தது ஐந்து முறை புக் செய்ய வேண்டியுள்ளது. ஆறாவது முறையாகத்தான் புக்கிங்கை ஓட்டுநர்கள் ஏற்கிறார்கள்.

சில நேரங்களில், அவர்கள் கேட்கும் அதிக கட்டணம், ஆன்லைனில் செலுத்தாமல் நேரில் கட்டணத்தைக் கொடுப்பது என அவர்களின் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டாலும், சில நேரங்களில் ஓட்டுநர்கள் புக்கிங்கை ஏற்பதில்லை,” என்கிறார் பல்லாவரத்திலிருந்து நுங்கம்பாக்கம் வரை தினமும் பயணிக்கும் வி.புவனா.மேலும் பேசிய அவர், “இந்தப் புதிய நடைமுறையால், ஓட்டுநர்கள் இனி புக்கிங்கை கேன்சல் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe