கோவை மாநகரில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை- 5 பேர் கைது...

published 5 days ago

கோவை மாநகரில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை- 5 பேர் கைது...

கோவை: கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாநகர காவல் ஆணையாளர்  பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் துணை ஆணையர்  ஸ்டாலின், சரவணகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கும் மாணவர்கள் போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை ஆணையர்  ஸ்டாலின் மேற்பார்வையில் ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான தனிப்படையினர் பீளமேடு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் அறைகளில் சோதனை நடத்தப்பட்டது.


இதில் பீளமேடு சித்ரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மாணவர்கள் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஒரு காருக்கு 2 நம்பர் பிளேட்டுகள் இருந்தன. அதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார், அந்த அறையில தங்கி இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த பிரனேஷ் (வயது 19), சபரீஷ் (20), கவின்குமார் (22) என்பதும், இதில் பிரனேஷ், சபரீஷ் ஆகியோர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. 

அவர்கள் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், மேகலாயா, நாகலாந்து போன்ற பகுதிகளில் இருந்து முதல்தர கஞ்சா வாங்கி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதில் கிடைக்கும் பணத்தில் பெங்களூருவுக்கு சென்று போதை ஸ்டாம்பு, போதை மாத்திரைகள் மற்றும் வித்தியாசமான போதைப்பொருட்களை வாங்கி அவர்கள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உயர்ரக போதைப்பொருட்கள், போதை ஸ்டாம்புகள் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த 3 பேரும் யாருக்கு எல்லாம் பேசி உள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் கோவையை சேர்ந்த ஒருவர் அசாம் மாநிலத்துக்கு சென்று அங்கு இருந்து உயர்ரக கஞ்சாவை வாங்கி கோவைக்கு அனுப்பி வைத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த தென்னரசு (27), உடுமலையை சேர்ந்த உமாபதி (26) ஆகியோர் அவற்றை வாங்கி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் தென்னரசு, உமாபதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உயர்ரக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe