கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், ஈரோடு இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாகவும், இதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டா அனுமதி அளித்துள்ளதாகவும், தெரிவித்தார்.
மேலும் ஈரோடு தொகுதியில் பலமுறை இடைத்தேர்தல் நடந்த போதிலும் அங்கு எந்த மாற்றமும் நிகழவில்லை எனவும், ஜனநாயக ரீதியில் ஈரோடு இடைத்தேர்தல் நடைபெறாது என்பதால் பல்வேறு கட்சிகளும் தேர்தலில் புறக்கணித்துள்ளதாகவும், இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அண்ணாமலை பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
"ஈரோடு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களும் புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம், இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தெரிவித்து அவர் அனுமதி அளித்துள்ளார். காரணம் பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவில் ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் என நக்சல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கூட தேர்தல்களை புறக்கணிக்காமல் போட்டியிட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நடைபெறும் ஈரோடு இடைத்தேர்தலில் லஞ்சத்தை மிக சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தேர்தல் நடத்தப்படும்.
கடந்த முறை மக்கள் பட்டியில் அடைக்க வைக்கப்பட்டனர், தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டால் இம்முறையும் அதேபோல் மக்கள் பட்டியில் அடைக்கப்படுவார்கள், மக்களுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்க வேண்டாம் என நாங்கள் நினைக்கிறோம். தவறு செய்யும் கட்சிகளை மக்கள் இந்த இடைத்தேர்தலில் கண்டிப்பாக தண்டிப்பார்கள் என கருதுகிறோம். அதே வேளையில் பாஜக தேர்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும். பணம், பரிசு பொருட்கள் ஆகியவற்றை திமுக கடந்த முறை போல வழங்கும். ஆளும் திமுக அரசு இந்த தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும். ஜனநாயக ரீதியில் ஈரோடு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்பதால் தான் பல்வேறு கட்சிகளும் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பு ஈரோட்டில் பலமுறை இடைத்தேர்தல் நடைபெற்ற போது எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போதும் எந்த பலனும் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை" என்றார்.
"திமுகவினர்
ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்தும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இதனை முதல்வர் கண்டிப்பதில்லை. எனவே முதல்வரும் ஆளுநரை விமர்சிப்பதை ஊக்குவிக்கிறார் என்று தான் கருத முடியும். குழந்தைத்தனமாக செயல்படுகிறார்கள் என ஆளுநரை சொல்ல வைத்ததற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது திமுக தான்.
பெரியார் குறித்து 1962 ஆம் ஆண்டு முரசொலியின் பொங்கல் மலரில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பேச்சு குறித்த கார்ட்டூன் படங்கள் உள்ளன. பல்வேறு ஜாதிகள் குறித்து பெரியார் தரக்குறைவாக பேசி உள்ளார். சீமான் கூறிய கருத்து சரிதான். ஆனால் அதை பாஜக கடந்து போக விரும்புகிறது. வள்ளுவர் குறித்தும், தொல்காப்பியம் குறித்தும் தமிழ் மொழிக்கு எதிராகவும் பெரியார் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவற்றை புறக்கணித்து தமிழகத்தின் வளர்ச்சிக்கான அரசியலை மட்டுமே பாஜக முன்னெடுக்க விரும்புகிறது.
டங்க்ஸ்டன்ட் திட்டம் ஏலம் விடப்பட்டால் மத்திய அரசுக்கு எந்த நிதி பலனும் கிடையாது. முழுக்க முழுக்க அது மாநில அரசுக்கு தான் செல்லும். இந்த திட்டம் குறித்து முதல்வர் பொய்யான தகவல்களை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசு மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தை ஏன் சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிடவில்லை.
மத்திய அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை மாநில அரசு பாழாக்கி வருகிறது. அதில் குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களும் அடங்கும்" என அண்ணாமலை தெரிவித்தார்.
துபாய் கார் பந்தயத்தில் வெற்றிபெற்ற நடிகர் அஜித்குமார் அணியினர் தமிழக விளையாட்டு துறையின் லோகோவை பயன்படுத்தியதற்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, அங்கு நடிகர் அஜித்குமார் கழிப்பறை பயன்படுத்தி இருந்தாலும் உதயநிதி திராவிட மாடல் என பெருமை பேசி இருப்பார். தனி மனிதனாக கடின உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் அஜித். சினிமாத்துறையில் உச்சத்தில் இருக்கும் போது தனது விருப்பத்திற்காக கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். உதயநிதியை போல காமெடி நடிகர்களின் துணையோடு சினிமாவில் வெற்றி பெற்றவர் அல்ல என விமர்சித்தார்.
பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதை தேர்தலோடு தொடர்பு படுத்தி பேசிய அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு பதில் அளித்தவர், அரசியலில் வயதானவர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்ற வகையில் துரைமுருகனுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என கூறினார்.
---