எங்களுக்கும் உரிமைத்தொகை கொடுக்கலாம் அல்லவா? கோவையில் நகைச்சுவையாக பேசிய அமைச்சர் காந்தி...

published 1 week ago

எங்களுக்கும் உரிமைத்தொகை கொடுக்கலாம் அல்லவா? கோவையில் நகைச்சுவையாக பேசிய அமைச்சர் காந்தி...

கோவை: கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூமிதான திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக செம்மேடு மற்றும் ஓடந்துறை பகுதியில் வசித்து வரும் 257 நபர்களுக்கு வீட்டுமனை நில விநியோக பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனை நில விநியோக பத்திரங்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏறத்தாழ 30 ஆண்டு காலங்களாக நில விநியோக பத்திரங்கள் கிடைக்குமா கிடைக்காதா என்ற நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் உங்களுக்கு நான் இருக்கிறேன் என தமிழக முதலமைச்சர் 30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்திருக்கிறார் என தெரிவித்தார். இதற்காக கைத்தறி துறை அமைச்சர் இரண்டு மணி நேரம் செலவழித்து இவற்றில் கையொப்பமிட்டுள்ளார் என்றார். இந்த மூன்றரை ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேல் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  தமிழக அரசின் விடியல் பயணம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் போன்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருவதையும் தமிழ் புதல்வன் நான் முதல்வன் மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டார். கோவை மாநகராட்சியில் மட்டும் 415 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிக்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சாலை பராமரிப்பிற்காக 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கிய அருகில் 100 கோடி ரூபாய் டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, 257 பேருக்கு தற்பொழுது பட்டா வழங்கப்படுவதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் மட்டும் 1554 ஏக்கர் பூமிதான நிலம் இருப்பதாகவும் அதில் தற்பொழுது வரை 117 ஏக்கர் நிலங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு துறைகளுக்கும், சிறைச்சாலை காவல் நிலையங்கள் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றிற்கு நிலங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார். இந்த பூமிதான துறைக்கு தலைவராக தன்னை முதலமைச்சர் அமர்த்தி இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்பொழுது மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனை பட்டாக்களை விட இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் ஒன்று உள்ளது அது என்னவென்றால் 1991ம் ஆண்டு, எந்த காரணமும் இல்லாமல் கோவை சிறையில் 75 நாட்கள் இருந்ததாகவும் ஆனால் தற்பொழுது அதே சிறைச்சாலைக்கு கிட்டத்தட்ட 95 ஏக்கர் நிலத்தை தற்பொழுது கையெழுத்துயிட்டு தந்திருக்கிறேன். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க மாட்டார் என தெரிவித்த அவர் கலைஞர் காலத்தில் வழங்கப்பட்ட கலர் டிவி தற்பொழுது வரை ஓடுகிறதா இல்லையா? எனவும் அதற்கு பின்பு ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் மிக்சி கிரைண்டர் மின்விசிறி எல்லாம் வழங்கினார்கள் ஆனால் தற்பொழுது அது இல்லை என தெரிவித்த அவர் இரண்டு ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் அதுதான் என கூறினார். இந்த ஆட்சியை திமுக ஆட்சி என்று கூட நான் கூற மாட்டேன் இது மக்களாட்சி எனவும் மக்களின் தலைவர் தான் ஸ்டாலின் எனவும் புகழ்ந்தார். மேலும் தமிழக முதலமைச்சரை அண்டை மாநிலமான கேரளாவில் மிகவும் பாராட்டுகிறார்கள் எனவும் பல்வேறு மாநிலங்கள் இவரை பின்பற்றுவதாக தெரிவித்தார். நம்முடைய முதலமைச்சர் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியம் அளிப்பதாகவும் அதற்கு காரணம் ஒரு மனிதனுக்கு ஓரளவு சிந்திக்கின்ற சக்தி வந்து விட்டாலே நல்லது கெட்டது தெரிந்துவிடும் அப்பொழுதுதான் நம் ஊர் நாடு மட்டுமல்லாமல் அனைத்தும் நன்மையா இருக்கும் என தெரிவித்தார். எனவே பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்து கொண்டிருந்தது தற்பொழுது மூன்றரை ஆண்டுகளாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை சிந்தியுங்கள் என தெரிவித்தார். எனவே மக்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் கூறினார்.

மகளிர் உரிமைத் தொகையை எங்களுக்கு அளிக்க கூடாதா என ஆண்களை குறிப்பிட்ட அமைச்சர் காந்தி எங்களுக்கு அளித்தால் என்ன ஆகும் என்று தெரியும் என்று சிரித்துக் கொண்டே குடும்பத் தலைவிகளுக்கு தான் குடும்பத்தை பற்றி தெரியும் என தெரிவித்தார் மேலும் நானும் செந்தில் பாலாஜியும் மந்திரிகள் தான் ஆனால் எங்களுக்கு குடும்பத்தை பற்றி தெரிந்தது பூஜ்ஜியம் தான். எனது மனைவிக்கு தான் குடும்பத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்று தெரியும் என்று தெரிவித்தார். இதற்காகத்தான் மகளிர்க்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe