சத்குருவின் குடும்பத் திருவிழா- சத்குருவிற்கு நன்றி தெரிவிக்க விழா எடுக்கும் கிராம மக்கள்…

published 3 days ago

சத்குருவின் குடும்பத் திருவிழா- சத்குருவிற்கு நன்றி தெரிவிக்க விழா எடுக்கும் கிராம மக்கள்…

கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தொண்டாமுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்து ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்னும் விழாவை வரும் 5-ம் தேதி நடத்த உள்ளனர்.

கோவை மாவட்டம் மத்துவராயப்புரத்தில் நடைபெறும் இவ்விழாவில் தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.பி. வேலுமணி, திருமதி. வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இவ்விழா ஒருங்கிணைப்பாளர் திரு. குமார் அவர்கள் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகம் அறிந்த யோகியும், ஞானியுமான சத்குரு அவர்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொண்டாமுத்தூர் வட்டார மக்களின் நலனுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

அவருடைய ஈஷா அறக்கட்டளையின் மூலம் எங்களுடைய கிராம மக்களின் கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, விவசாயம், பொருளாதாரம் உள்ளிட்டவை நன்கு மேம்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈஷாவைச் சார்ந்தே உள்ளது.

அந்த வகையில், சத்குருவை நாங்கள் எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறோம். கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் கூட எங்களுடைய நூற்றுக்கணக்கான குடும்பங்களை பேணி காத்தது ஈஷா மையம் தான். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் உடல் மற்றும் மன நலனிற்காக ஈஷாவை தேடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சேவையாற்றும் ஈஷா நம்முடைய தொண்டாமுத்தூர் பகுதியில் அமைந்து இருப்பது கிராம மக்களாகிய எங்களுக்கு பெருமையாக உள்ளது.

உள்ளூர் மக்கள் முதல் உலக மக்கள் வரை அனைவருக்கும் சேர்த்து அனுதினமும் தொண்டாற்றி வரும் சத்குருவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டியது எங்களுடைய கடமையாகும்.

அதற்காக, ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்னும் ஒரு நிகழ்வை வரும் ஜனவரி 5-ம் தேதி கோவை மத்துவராயப்புரத்தில் உள்ள திரு.சக்திவேல் அண்ணா அவர்களின் தோட்டத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களின் கீழ் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மாலை 5 மணியளவில் ஈஷா பிரம்மாச்சாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும், அதை தொடர்ந்து பேரூர் ஆதீனம் அவர்களின் அருளுரையும் நடைபெற உள்ளது.

மேலும், இவ்விழாவில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.பி. வேலுமணி, திருமதி. வானதி சீனிவாசன், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.என்.கந்தசாமி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் திரு. செல்லமுத்து, நல்லறம் அறக்கட்டளை தலைவர் திரு. எஸ்.பி.அன்பரசன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான திரு. ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

முன்னதாக, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தொண்டாமுத்தூர் பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து ஊர் மக்களும் கலந்து கொள்ளலாம். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என அவர் கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் குமார் அவர்களுடன் விழா குழுவினர் இருட்டுப்பள்ளம் கிட்டுசாமி, செம்மேடு வேலுமணி,  முள்ளாங்காடு சசிகலா மற்றும் கோட்டைகாடு குழந்தைவேலு ஆகியோர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe