2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு பெண்களின் பங்கு என்ன?- கோவையில் மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்கள்...

published 1 day ago

2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு பெண்களின் பங்கு என்ன?- கோவையில் மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்கள்...

கோவை: அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்னபூர்ணா தேவி கலந்துகொண்டு, முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு பதக்கங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் தி.ச.க. மீனாட்சிசுந்தரம், துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் ஆகியோர் தலைமை தாங்கி 2024-2025 கல்வியாண்டுக்கான நிறுவனத்தின் சாதனைகளை தொகுத்து உரையாற்றினார்.

மனையியல், உயிர்  அறிவியல், இயற்பியல் மற்றும் கணக்கீட்டு அறிவியல், கலை மற்றும் சமூகஅறிவியல், வணிகம் மற்றும் மேலாண்மையியல், கல்வியியல், பொறியியல் மற்றும் உடல்நலப் பராமரிப்பு அறிவியல் ஆகிய எட்டு துறைகளைச் சார்ந்த இளநிலை (UG) 1814, முதுநிலை (PG) 624, (M.Phil.) 1, முனைவர் பட்டம் (Ph.D) 33 என மொத்தம் 2472 மாணவியர் பட்டம் பெற்றனர்.

பல்வேறு துறைகளை சார்ந்த 91 மாணவியர் முதல் மதிப்பெண் பெற்று பதக்கங்களை பெற்றனர்.

இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் நாம் சுயசார்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் விதமாக நகர்வதாகவும், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்க, அனைத்துத் துறைகளிலும் பெண்களின் தீவிரப் பங்களிப்பு மிகவும் அவசியமானதும் முக்கியமானதுமாகும் என எடுத்துரைத்தார்.

பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்பது பெண்களின் அதிகாரமளித்தலுக்கு உறுதியான வடிவத்தை வழங்குவதற்கான ஒரு விரிவான பார்வையாகும் எனவும், பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தினை வளர்த்து கவனித்துக்கொள்வதால், பொறுமை மற்றும் தாய்மை எனும் தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் எனவும்,

ஊட்டச்சத்துக் குறைபாடு, கல்வியறிவின்மை, பாலின சமத்துவமின்மை, பொருளாதார மேம்பாடு மற்றும் உலகளாவிய காலநிலை ஆகிய சவால்களைக் கையாள்வதில் பெண்களின் தலைமை ஆரோக்கியமான பாதுகாப்பான சமமான சமூகத்திற்கு வழி வகுக்கும் என கூறினார்.

பெண்கள் தங்கள் திறன் மற்றும் இரக்கத்துடன் இந்த சவாலுக்கு பதிலளிக்க தயாராக உள்ளதாகவும், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இந்த மதிப்புகளுடன் எதிரொலிக்கிறது என்றும், அதன் கொள்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனவும், அவை நிச்சயமாக பாராட்டத்தக்கவை பின்பற்றத்தக்கவை என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தக் கொள்கைகள், பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உதவுவதோடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்  நமது அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும் என்றார்.

இது நம்மை சிறந்த தலைவர்களாக மட்டுமல்லாமல், முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாகவும் ஆக்குகிறது. அது ஒரு குடும்பத்தை வளர்ப்பது, ஒரு வணிகத்தை நிர்வகிப்பது அல்லது தேசிய- சர்வதேச தலைமைத்துவத்தை வழங்குவது என எதுவாக இருந்தாலும், பெண்களின் முடிவுகள் வலுவாக இருக்கும். சவால்களில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்" என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe