கோவையில் ரேடியோவை ஒளித்து வைத்ததால் இளைஞர் கொலை...

published 5 hours ago

கோவையில் ரேடியோவை ஒளித்து வைத்ததால் இளைஞர் கொலை...

கோவை: கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகன் சோம்நாத் (வயது 24). நண்பர் மதன்(வயது 47).

சோம்நாத் சரிவர வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது தனியார் பேருந்து நடத்துனருக்கு உதவியாளராக சென்று வந்துள்ளார். இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசிக்காமல் தனி வீட்டில் வசித்து வருகிறார். இவருடனே மதனும் தங்கி வசித்து வந்துள்ளார். மதன் அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள காவல் தெய்வம் கோவில் ஒன்றில் அடிக்கடி பூஜை செய்து வருபவர் எனவும் மாந்திரீகம் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு கொண்டவர் எனவும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை சோமநாத்தின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அருகில் வசிக்கும் உறவினர்கள் வீட்டை திறந்து பார்க்கும் பொழுது சோம்நாத் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தும் பொழுது மதன் தான் சோம்நாத்துடன்  தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த மதனைபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சனிக்கிழமை அன்று சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

போலிசார் நடத்திய விசாரணையில், மதன் தினமும் இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் ரேடியோவில் பாடல் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் இதனால் அக்கம்பக்கத்தினர், சோம்நாத்திடம் பல முறை தெரிவித்து மதனை காலி செய்து செல்லும் படி கூறியுள்ளனர். சோம்நாத்தும் இது தொடர்பாக மதனிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு வந்துள்ளது. அந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று சோம்நாத் ரேடியோவை எடுத்து ஒளித்து வைத்துள்ளார்.  இரவு மதன் மது அருந்தி விட்டு  வந்த போது  ரேடியோ இல்லாததால் சோம்நாத்திடம் கேட்டு சண்டையிட்டுள்ளார். பின்னர் மதன் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது சோம்நாத் உறங்கி கொண்டு இருந்த போது ஆத்திரத்திலும் மது போதையிலும் இருந்த மதன் வீட்டிற்கு வெளியில் கிடந்த கல்லை கொண்டு சோம்நாத்தின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து பரிகாரம் செய்கிறேன் என வீட்டிற்குள்ளேயே பூஜை பொருட்களை கொண்டு பரிகாரம் செய்துள்ளார். பின்னர் வீட்டின் கதவை மூடிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து வந்ததாக காவல்துறையினரிடம் மதன் தெரிவித்துள்ளார்.

தற்போது மதன் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ரேடியோவை ஒளித்து வைத்ததால் ஆத்திரத்தில் இளைஞரை கொலை செய்த நபரின் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe