பீப் கடை போடக்கூடாது; கோவையில் தள்ளுவண்டிக் கடைக்கு பா.ஜ.க நிர்வாகி மிரட்டல்...!

published 14 hours ago

பீப் கடை போடக்கூடாது; கோவையில் தள்ளுவண்டிக் கடைக்கு பா.ஜ.க நிர்வாகி மிரட்டல்...!

கோவை: தள்ளுவண்டிக் கடையில் பீப் பிரியாணி விற்பனை செய்யக்கூடாது என்று பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தனது கட்சி நபர்களை வைத்து மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணபதி உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி பிரியாணி, சில்லி கடை நடத்தி வருபவர்கள் ரவி-ஆபிதா தம்பதியினர். 

இவர்களது கடைக்குச் சென்ற பா.ஜ.க ஓ.பி.சி. மாநகர் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, இந்த இடத்தில் பீப் கடை போடக்கூடாது என்று தனது கட்சி ஆட்களை அழைத்து வந்து மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தார் ஆபிதா.

இதுகுறித்து ஆபிதா கூறுகையில், "கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இந்த தள்ளுவண்டிக் கடையைத் தொடங்கினோம். எங்களுக்கு தெரிந்த தொழிலை நடத்தி வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். இதனிடையே பா.ஜ.க.வினர் எங்கள் கடைக்கு வந்து மிரட்டியதோடு, "யாரைக் கேட்டு கடை போட்டாய்? காலி செய்துவிடுவேன். சிக்கன், மட்டன், மீன் வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள். ஆனால், மாட்டிறைச்சி விற்கக் கூடாது" என்று மிரட்டினார்.

மேலும், ஜாதிய பாகுபாட்டை வைத்து, என்னையும் எனது கணவரையும் மிரட்டினார். அசிங்கமாக நடத்தினார். எங்களுக்கு யாரும் ஆதரவுக்கு இல்லை. வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம்." என்று ஆபிதா வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகி சுப்பிரமணி கூறுகையில், "10 நாட்களுக்கு முன்பு அந்த தம்பதியினர் இங்கு பீப் கடை போட்டார்கள். அன்றைய தினமே கடை போடக்கூடாது என்று நாங்கள் கூறினோம். மது அருந்திவிட்டு வருபவர்கள் எல்லாம் சாலை ஓரமுள்ள இந்த கடைகளில் நின்று கொண்டு இறைச்சிகளை சாப்பிடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு இறைச்சிக்கடை வைத்துள்ள அனைவரையும் தான் எடுக்கச் சொல்கிறோம்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe