உடையாம்பாளையம் பீப் பிரியாணி விவகாரம்- ஊர் மக்கள் சாலை மறியல்- ஊர்மக்கள் விடுக்கும் கோரிக்கைகள் என்ன?

published 13 hours ago

உடையாம்பாளையம் பீப் பிரியாணி விவகாரம்- ஊர் மக்கள் சாலை மறியல்- ஊர்மக்கள் விடுக்கும் கோரிக்கைகள் என்ன?

கோவை: கோவை கணபதி அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் ரவிகுமார்- ஆபிதா தம்பதியினர் தள்ளு வண்டியில் பீப் பிரியாணி பீப் சில்லி விற்பனை செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாஜக ஓபிசி பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி என்பவர் இந்த பகுதியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என்று கட்டாயப்படுத்தி மிரட்டும் தொணியில் பேசியதாக  வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து பாதிக்கப்பட்ட தம்பதிகள் இப்பகுதியில் மீன் கடை துரித அசைவ கடைகள் எல்லாம் இருக்கும் பொழுது மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்யும் தங்களை மட்டும் கடை போடக்கூடாது என்று மிரட்டுவதாக தெரிவித்திருந்தனர். 
ஆனால் ஊர் கட்டுப்பாடு கோவில் அருகில் இறைச்சி கடைகள் இருக்கக் கூடாது என்று தான் கூறியதாகவும் அவர்களது கடை மட்டுமல்லாமல் அருகில் உள்ள மீன் கடை உள்ளிட்டவற்றையும் எடுக்க சொல்லியதாக சுப்பிரமணி விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு ஆதரவாக பல்வேறு  பெரியாரிய திராவிட அமைப்புகள் இஸ்லாமிய அமைப்புகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி மீது புகார் அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தம்பதிகளும் பாஜக நிர்வாகி சுப்பிரமணி மற்றும் ஆறு அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை மிரட்டியதாக கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து இன்று காலை புகார் அளித்திருந்தனர்.

இதற்கிடையே துடியலூர் காவல்துறையினர் சுப்பிரமணி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் தேவநாதன் பொதுமக்களை சந்தித்தும் சுப்பிரமணியின் தாயாரை சந்தித்தும் முறையாக சட்டப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து ஊர் மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.மேலும் சுப்பிரமணியின் வீட்டின் உள்ளே சில நபர்கள் சென்று தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் வீட்டில் உள்ள பொருட்களை  சேதப்படுத்தியதாக அவரது தாயார் துணை ஆணையாளரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவரது வீட்டில் காவல்துறையினர் சென்று சோதனை மேற்கொண்டு உரிய விசாரணை நடத்தப்படும் என கூறி சென்றனர்.

இந்நிலையில் துணை ஆணையாளரிடம் கோவிலை சுற்றி அசைவ கடைகள் வைக்கக்கூடாது, சுப்பிரமணியன் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும், சுப்பிரமணியன் வீட்டிற்குள் நுழைந்து வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று  கோரிக்கைகளை ஊர் மக்கள் முன் வைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe