கோவை: உடையாம்பாளையம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டுமென முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
கோவை கணபதி அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் தள்ளு வண்டியில் மாட்டிறைச்சி விற்பனை செய்து வந்த ரவி- ஆபிதா தம்பதியினரை பாஜக ஓபிசி பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் மிரட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்து உள்ள நிலையில் பாஜக நிர்வாகி மீது துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் ரவி- ஆபிதா தம்பதியினருடன் வந்து மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், அந்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணி ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி உள்ளதாகவும் கடை உள்ள இடத்திற்கும் கோவில் உள்ள இடத்திற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார். மேலும் ஊர் மக்களும் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் சுப்பிரமணி அவருடைய அரசியலுக்காக அங்கு இதுபோன்ற நிலையை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மீண்டும் அதே பகுதியில் அந்த உணவகம் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரும் இது குறித்து பரிசளிப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நாளை ஜி என் மில் பகுதியில் அனைத்து முற்போக்கு அமைப்புகளும் சேர்ந்து இந்த உணவகத்தை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் மாட்டிறைச்சியை உண்ணும் உரிமை விற்கும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் உடையாம்பாளையத்தில் கவுன்சிலர் கம்யூனிஸ்ட் கட்சி ஊர் தலைவர் திமுக கட்சியினராக இருப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அது பற்றி தங்களுக்கு கவலை இல்லை எனவும் வாக்குகளுக்காக அனைவரும் இணைந்திருக்கலாம் ஆனால் நாங்கள் யாரும் வாக்குகளுக்காக செல்லக்கூடியவர்கள் இல்லை எனவும் மக்களுக்காக இயங்கக் கூடியவர்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, இயல்பாகவே பாஜக பசுவை வைத்து அரசியல் செய்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்று எனவும் சுப்ரமணி அவருடைய அரசியல் நலனுக்காக ஊர் மக்களை காவு கொடுப்பதாக தெரிவித்தார். அதேபோல் உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் அவருக்கு ஆதரவாக இல்லை எனவும் அப்பகுதியில் உள்ள இந்து இயக்கத்தின் மக்களை திரட்டி சாலை மறியல் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார். உடையாம்பாளையத்தில் மாட்டிறைச்சி உண்ணும் குடும்பங்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன என தெரிவித்த அவர் பசுவை வைத்து அரசியல் செய்கிறார்கள் என விமர்சித்தார். கோவை தற்பொழுது அமைதியாக உள்ளது அதனை சீர்குலைப்பது தான் பாஜகவின் வழக்கமான பணி என கூறினார்.
அந்த விவகாரம் சுப்பிரமணியின் தனிப்பட்ட நலனுக்காக தான் செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் மீது அவர்களுக்கு என்றைக்கும் நம்பிக்கையும் கிடையாது கடவுள்களை உண்மையாக நேசிப்பவர்களும் கிடையாது என தெரிவித்தார். சுப்பிரமணியத்தை உடனடியாக கைது செய்து விட்டால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று தாமதிக்கின்ற காரணத்தினால் தான் இது போன்ற பொய்யான தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறார்கள் என விமர்சித்தார். இந்த விவகாரத்தில் தம்பதியினர் மீது அழைக்கப்பட்டிருப்பது பொய்யான புகார் எனவும் அந்த புகாரை முறையாக விசாரித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார். பாஜக நிர்வாகியின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவு பிணையில் வெளிவர முடியாத பிரிவு எனவும் எனவே அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கூறினார்.