கோவையில் ஐடி நிறுவனங்கள் அதிகரிப்பு..வேலைவாய்ப்பு அதிகரிக்கும்..!

published 2 years ago

கோவையில் ஐடி நிறுவனங்கள் அதிகரிப்பு..வேலைவாய்ப்பு அதிகரிக்கும்..!

கோவை: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஹப் என அழைக்கப்படும் பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களின் வரிசையில் கோவை நகரமும் வளர்ந்து வருகிறது. கோவையின் வளர்ச்சியால் தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50ஆயி ரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன.

இதில், கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில்நிறுவனங்களும் உள்ளன.

கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் சிறு குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர்.

அவர்களது தொழில்நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளன.

ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.

அதே போல் கோவை ராஜா வீதி, பெரியகடை வீதி, இடையர் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, செட்டி வீதி, அசோக் நகர், அய்யப்பா நகர், செல்வபுரம், சலீவன் வீதி, காந்திபார்க், சாய்பாபா காலனி, கிராஸ்கட் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பட்டறைகளும், நகை தயாரிப்பு தொழிற்சாலைகளும் உள்ளன.

இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் பணியாற்றி வருகின்றனர். அதே போல், கோவை மாவட்டத்தில் ஜவுளி தொழில்நிறுவனங்கள், நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் என ஏராளமான தொழில்நிறுவனங்கள் உள்ளன.

இதில் லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் பிற மாவட்ட, மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதனிடையே கோவையில் கடந்த 10 வருடங்களாக ஐடி நிறுவனங்கள் மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றன.

அதற்கு ஏற்றார் போல் கோவை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தலைநகர் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக பல ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தன.

அதில் சில ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டும் உள்ளன. இதுதவிர இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல், மக்கள் தொகை பெருக்கம் என பல்வேறு இன்னல்களை சென்னையில் ஐடி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக, கோவை மாவட்டத்திற்கு ஐடி நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் அரசு சார்பில் சிங்காநல்லூரில் டைடல் பார்க் உள்ளது.

இதுதவிர சரவணம்பட்டி, அவினாசி சாலைகளில் தனியார் ஐடி நிறுவனங்களின் டெக் பார்க்குகள் உள்ளன. இவைகளில் 100க்கும் மேற்பட்ட சிறிய ஐடி நிறுவனங்களும், 20க்கும் மேற்பட்ட பெரிய ஐடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஐடி நிறுவன பிரதிநிதிகள் கூறியதாவது:

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பணி புரியும் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் கோவையை சார்ந்தவர்களே ஆகும். சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், குடிநீர் போன்றவைகள் காரணமாக பெரும்பாலான மக்கள் கோவையில் பணிபுரியவே விரும்புவார்கள்.

அண்மையில் பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக ஊரே வெள்ளக்காடுகளாக மாறியது. சென்னையிலும் இதே சூழ்நிலை தான்.

வானிலை காரணம் ஒரு புறம், இடநெருக்கடி மற்றொரு காரணம். கோவையில் அப்படி இல்லை. இதமான காற்று, சுத்தமான சிறுவாணி குடிநீர், வெயில் அடித்தாலும் சில்லென வீசும் தென்றல் காற்று என இங்கு ஏராளமான வசதிகள் உள்ளன.

சர்வதேச விமான நிலையமும் உள்ளன. விரைவில் விமான விரிவாக்கத்திற்கு பிறகு வெளிநாடுகளின் விமானங்கள் அனைத்தும் கோவைக்கு வந்து செல்லும். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக கோவைக்கு வரும் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக கோவையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் வளர்ச்சியால் அதை சார்ந்துள்ள பல துறைகளும் கோவையில் வளர்ச்சியடைந்துள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்

இதுகுறித்து எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் கூறுகையில், "சரியான திறன்களை கொண்டவர்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் ஏராளம். கோவை மாவட்டம் ஒரு தொழில்முனைவோர் நகரம்.

வலுவாக வளரப் போகிறது. ஏராளமான வேலைவாய்ப்புகள் மாணவர்களுக்கு கிடைக்கப்போகிறது" என்றார்.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் பயன் அடைவார்கள். இதனால், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என மக்களிடையே எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe