கோவையில் இரவில் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம்- 100க்கும் மேற்பட்டோர் கைது...

published 2 days ago

கோவையில் இரவில் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம்- 100க்கும் மேற்பட்டோர் கைது...

கோவை: விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூலூரில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள் திடீரென பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிப்பு திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால்  விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனஹல்லி (பெங்களூரு) வரை 270 கிலோ மீட்டர் தொலைவுக்கு பரந்து விரிந்து உள்ள இந்த திட்டத்தின் கீழ், கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கப்பட உள்ளது. இதனால், ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என அஞ்சுகின்றனர். 

விவசாயிகள் தரப்பில், "எண்ணெய் குழாய் பதிப்பதால் நிலத்தடி நீர் மாசுபடும், விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படும், நிலத்தின் மதிப்பு குறையும்" எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த திட்டத்திற்கு மாற்று வழி இருப்பதாகவும், விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் சாலையோரம் குழாய்களை பதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. இதனை அடுத்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை  தொடங்கினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 

இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான அடிப்படை வசதிகளை செய்ய போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி, திடீரென அங்கு இருந்து கிளம்பிய விவசாயிகள், சந்தைப்பேட்டை சாலை வழியாக சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் திருச்சி சாலை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர். திருச்சி சாலையில் அமர்ந்து போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராகவும், எண்ணெய் குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்த முயற்சிப்பதாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். 

சுமார் 40 நிமிடங்களுக்கும்  மேலாக விவசாயிகளின் மறியல் போராட்டம் தொடர்ந்த நிலையில், மறியலில் ஈடுபட்ட 125 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். விவசாயிகளின் திடீர் மறியல் காரணமாக திருச்சி சாலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe