கோவையில் பங்கு சந்தை முதலீடு நிறுவன ஊழியர்கள் கதறல்- காரணம் என்ன?

published 6 days ago

கோவையில் பங்கு சந்தை முதலீடு நிறுவன ஊழியர்கள் கதறல்- காரணம் என்ன?

கோவை: பங்குச் சந்தையில் லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் பகிர்வுத் தொகை தருவதாக கூறிய தனியார் நிறுவன உரிமையாளர், தலைமறைவு. பொது மக்கள் பலரிடம், பல கோடி ரூபாய் முதலீடு பெற்ற ஊழியர்கள், கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில், இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளனர்.

கோவை நவ இந்தியா பகுதியில், கடந்த நான்கு வருடங்களாக ப்ளூ டைமண்ட் கேப்பிட்டல் என்ற ஷேர் மார்க்கெட் முதலீடு செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வந்துள்ளது. லீடர் மேத்யூ மற்றும் வினோத் ஆகிய இருவர் நடத்தி வந்த இந்த நிறுவனத்தில், 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும், தினந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு அலைபேசியில் அழைத்து முதலீடு பெற்று தர வேண்டும். லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் பகிர்வு கொடுப்பதாக இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. 

தொடக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு மாதம் தோறும் முறையாக பகிர்வு தொகை இந்நிறுவனம் கொடுத்துள்ளது. அதேபோல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் ஊதியத்தை வழங்கியுள்ளனர். முதலீட்டாளர்களை கவரும் ஊழியர்களுக்கு, 3% இன்சென்டிவ் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் அது நிறுத்தப்பட்டதாக கூறுகிறார் அங்கு பணிபுரிந்த வெங்கடேஷ்.


தொடக்கத்தில் மாதம் தோறும்  வாடிக்கையாளர்களுக்கு வட்டியாக 10% கொடுத்து வந்த நிறுவனம், படிப்படியாக அதனை குறைத்துள்ளது. இதனிடையே ப்ளூ டைமண்ட் கேப்பிட்டல் நிறுவனம், மேலும் ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கி, அதில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. 

கடந்த எட்டு மாதங்களாக யாருக்கும் பணம் கொடுக்காமல் அந்நிறுவன உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாக கூறுகிறார் அங்கு பணிபுரிந்த ஊழியர் தனலட்சுமி. 

மேலும் தான் முதலீடு வாங்கி கொடுத்துள்ளதால், வாடிக்கையாளர்கள் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்வதாக ஆதங்கப்பட்டார்.
ப்ளூ டைமண்ட் கேப்பிட்டல் நிறுவனம் வாடிக்கையாளர் பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. 

வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெறக்கூடிய முதலீட்டு பணத்தை, அந்நிறுவனத்தின் கணக்கில் வரவு வைத்துள்ளனர். பண பரிவர்த்தனை, முதலீடு போன்ற பணிகளை அந்நிறுவனத்தின் உரிமையாளர் லீடர் மேத்யூ மட்டுமே செய்ததாக தெரிகிறது. நிறுவன உரிமையாளர் யார் என வாடிக்கையாளர்களுக்கு இதுவரை நேரடியாக தெரியாத பட்சத்தில், சேவை மையத்தில் பணியாற்ற ஊழியர்கள் தான் இதில் சிக்கி தவிப்பதாக கூறுகிறார் அங்கு பணிபுரிந்த தீபக். 

இன்று கோவை மாநகர காவல் துறை ஆணையரகம் வந்த பங்குச் சந்தை தனியார் நிறுவன ஊழியர்கள், இது குறித்து புகாரை பதிவு செய்தனர். பொதுமக்களிடம் பணம் திரட்டிய இந்நிறுவனத்தில் முதலீடு செய்த  பணம் 15 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த உரிமையாளரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe