வெள்ளலூர் பேருந்து நிலையம் என்னாச்சு? மாநகராட்சி கொடுத்த பதிலால் அதிருப்தி! முழுக்கு போட திட்டம்?

published 7 months ago

வெள்ளலூர் பேருந்து நிலையம் என்னாச்சு? மாநகராட்சி கொடுத்த பதிலால் அதிருப்தி! முழுக்கு போட திட்டம்?

கோவை: வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டுமானம் என்ன ஆனது என்பது குறித்து தன்னார்வலர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோவை மாநகராட்சி அளித்த பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

படு வேக்கமாக வளர்ந்து வரும் கோவை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை  அ.தி.மு.க அரசு கடந்த 2020ம் ஆண்டு தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நின்றுபோனது வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானம்.

வெள்ளலூரில் 61 ஏக்கர் நிலத்தில் ரூ.168 கோடி மதிப்பில் துவங்கிய இந்த திட்டத்திற்கு தற்போது வரை ரூ.40 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. அதாவது கட்டுமானம் சுமார் 50% வரை நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், இத்திட்டம் முழுக்க முழுக்க கிடப்பில் போடப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெள்ளலூர் பேருந்து நிலையம் பாதியில் நிற்பதை சுட்டிக்காட்டு, விரைவில் முடித்து தர வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் என்பதை சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, "பேருந்து நிலையத்திற்கான இணைப்பு சாலைகள் சரியாக இல்லை, திருச்சியில் இருந்து வருகிற சாலையும் அதை ஒட்டி வருகிற சாலையும் அகலப்படுத்தப்பட்டால் தான் பேருந்து நிலைய திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படும். எனவே இந்த 2024ம் ஆண்டு அந்தப் பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.

அது வெறும் வார்த்தையாகவே நிற்கிறதே தவிர வாக்குறுதியாகவில்லை.

இதனிடையே கோவையைச்சேர்ந்த தன்னார்வலர்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்புக் குழுவை கடந்த 2023ல் உருவாக்கினர்.

இக்குழுவை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன் கடந்த மார்ச் மாதம் வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் பற்றி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதி, வெள்ளலூர் பேருந்து நிலையம் குறித்து கேள்வியெழுப்பினார்.

அந்த கடிதத்தை கோவை மாநகராட்சிக்கு அனுப்பி பதிலளிக்கும் படி கூறியது தி.மு.க அரசு. அதாவது, தங்களுக்கும், திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற வகையில், மனுவிற்கு பதில் அளிக்காமல் கையை விரித்தது.

இதனிடையே கோவை மாநகராட்சியின் தலைமை பொறியாளரிடமிருந்து சென்ற மாதம் பதில் வழங்கப்பட்டது. அதில் "வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணியானது அரசின் இறுதி உத்தரவிற்கு பின்னர் தொடரப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

உத்தரவிட  வேண்டிய அரசு, பொறுப்பைத் தட்டிக்கழிக்க, அடுத்தகட்ட நகர்வை முன்னெடுக்க வேண்டிய கோவை மாநகராட்சி, அரசு மீது பாரத்தைப் போட்டுவிட்டது.

கோவை செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலம் https://chat.whatsapp.com/HwBaxPZtuFpFQfLJFGS8Qi


இறுதியில் வாழைப்பழ காமெடி போல் ஆகிவிட்டது வெள்ளலூர் பேருந்து  நிலையத்தின் நிலை.

"திட்டச்சாலைகள் இல்லை என்று கூறும் அரசு அதனை அமைக்க எந்த வித முனைப்பும் காட்டவில்லை. வெள்ளலூர் குளத்தில் இருந்து சிங்காநல்லூர் குளம் வரை ஏற்கனவே திட்டச்சாலை அமைக்கும் திட்டம் அரசின் கையில் உள்ளது. இந்த சாலை அமைந்தால் திருச்சி சாலைக்கு இணைப்புச்சாலை உருவாகும், திருச்சி சாலையில் இருந்து அவினாசி சாலை செல்ல ஃபன் மால் சாலை உள்ளது. அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே, இத்திட்டம் கிடப்பில் போடப்படுவது அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது." என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே தான் கோவையில் சர்வதேச ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி உறுதி அளித்துள்ளார். கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டத்தை நிறைவேற்றாமல் அடுத்தடுத்த திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது? அரசியல் பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு, மக்கள் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்றினால் அரசுக்கு நற்பெயர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியைக் கூட தி.மு.க வசம் கொடுக்காத கோவை மக்கள், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். இந்த நம்பிக்கையைத் தக்க வைக்குமா திராவிட மாடல் அரசு என்பதை பொறுத்திருந்த பார்க்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe