பரந்தூர் களத்தில் விஜய்; திட்டத்தில் தி.மு.க-வுக்கு லாபம் இருப்பதாக அதிரடி பேச்சு!

published 1 day ago

பரந்தூர் களத்தில் விஜய்; திட்டத்தில் தி.மு.க-வுக்கு லாபம் இருப்பதாக அதிரடி பேச்சு!

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராடி வரும் மக்களை இன்று பொடவூரில் சந்தித்தார் த.வெ.க தலைவர் விஜய்.

பிரசார வாகனத்தில் இருந்தபடி அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது:

உங்கள் போராட்டம் குறித்த ஒரு குழந்தையின் பேச்சு, என் மனதை ஏதோ செய்தது. உடனே உங்களைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும், உங்களுக்காக நிற்பேன் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

ஒவ்வொரு வீட்டிற்கும் பெரியவர்கள் தான் முக்கியம். நாட்டிற்கு உங்களைப் போன்ற விவசாயிகள் முக்கியம்; உங்கள் காலடி மண்ணை தொட்டுக் கும்பிட்டு பயணத்தைத் தொடங்கலாம் என்று இருந்தேன், அதற்கு சரியான இடம் இது.

எனது கள அரசியல் பயணம் உங்கள் ஆசீர்வாதத்துடன் இங்கிருந்து தொடங்குகிறது. த.வெ.க., முதல் மாநாட்டிலேயே இயற்கை வளங்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பாதுகாப்பு கொள்கைகளைத் தெரிவித்திருந்தேன்.

இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன் என்றும் கூறியிருந்தேன்; அதனை இங்கு மீண்டும் ரொம்ப அழுத்தமாகக் கூறுகிறேன். இந்த பிரச்னையில் உங்களுடன் உறுதியாக நிற்பேன்; நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை.

சதுப்புநிலங்கள், நீர் நிலைகளை அழித்ததே புவி வெப்ப மயமாதலுக்குக் காரணம்; 90% விவசாய நிலங்கள், நீர் நிலைகளை அழித்து ஏர்போர்ட் அமைப்பது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன்; அதே நிலைப்பாடு தானே இங்கும் எடுத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் இந்த திட்டத்தில் அவர்களுக்கு எதோ ஒரு லாபம் இருக்கிறது. அதனை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.

நீங்கள் (தி.மு.க) எதிர்க்கட்சியாக இருந்த போது 8 வழிச்சாலை, காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்தை எதிர்த்தீர்களே? அப்போது விவசாயிகளுக்கு ஆதரவு, இப்போது எதிர்ப்பா?

நம்புற மாதிரியே நாடகமாடுவதில் நீங்கள் கில்லாடியாச்சே; இனி உங்கள் நாடகத்தைப் பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

விமான நிலையத்திற்காக ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளைக் கேட்கிறேன். வசாய நிலங்கள் அல்லாத, பாதிப்பு குறைவாக இருக்கும் இடத்தில் விமான நிலையத்தைக் கொண்டு வாருங்கள். 

ஏகனாபுரம் ஊருக்குள் வந்து மக்களைச் சந்திக்க நினைத்தேன்

எனக்கு பர்மிசன் கிடைக்கவில்லை; நான் ஊருக்குள் வருவதற்கு ஏன் தடை என்று தெரியவில்லை.

இப்படித்தான், நம்ம புள்ளிங்க ஒரு நோட்டீஸ் கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். ஒரு துண்டுச் சீட்டு கொடுத்ததற்கு; ஏன் என்று தெரியவில்லை. மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு விஜய் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe